18.11.07

மறக்க முடியாத மதுரை நினைவுகள்--5

5. டவுன் ஹால் ரோடு புராணம்

வக்கீல் புதுத்தெருவின் நடுவில் வெட்டிச்செல்லும் தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு. தெருவிற்கான பெயர்க் காரணம், தெருவின் முக்கில்(!) செல்லத்தம்மன் என்னும் அம்மன் கோயில் ஒன்று இருக்கும். தானப்பமுதலித் தெருவிலிருந்து வீடு மாற்றி இந்தத் தெருவிற்கு வந்து விட்டோம். இந்த வீட்டின் மாடிப் போர்ஷனை எங்களுக்குக் குடக்கூலிக்கு விட்டிருந்தார்கள். வீட்டிற்கு சொந்தக்கார அம்மாவும், அவர் மகனும் வீட்டின் கீழ்ப்பகுதியில் வசிந்து வந்தனர். வீட்டு சொந்தக்காரப் பையன் என்னைவிட ஐந்து வயது மூத்தவராக இருக்கலாம்; சேதுபதி ஹைஸ்கூலில் படித்து வந்தார். இவர் என் பாடப் புத்தகங்களுக்கு பழுப்பு நிறக் கெட்டிக்காகிதத்தில் அருமையாக, அதுவரையில் எனக்குத் தெரிந்திராத ஒரு புது முறையில் அட்டை போட்டுத்தருவார். அந்த முறை எனக்கு மிகவும் பிடித்துப்போய், என் பையன், பெண்ணுக்கு இதே முறையில், பிற்காலத்தில் நிறைய புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தந்து இருக்கிறேன். இப்படி அட்டை போடும் நேரங்களிலெல்லாம், ராஜாமணி என்னும் அவர் இன்றும் என் நினைவுக்கு வருவார். கூடவே,கோபால கிருஷ்ண கோன் பாடப்புத்தக விற்பனையாளர்களும், புதுமண்டபப் பழைய புத்தகக்கடைகளும் நினைவுக்கு வருகின்றன.

செல்லத்தம்மன் கோயிலுக்கு எதிரே பெரிய எண்ணைய் கடை ஒன்று உண்டு. கடைக்குப் பின்பகுதியில் எள் ஆட்டும் செக்கும் உண்டு. எங்கள் வீட்டுத்தேவைகளுக்கு இங்கு தான் எண்ணைய் வாங்குவோம். அந்தக்கடைக்காரர், சிறுவர்களைப் பார்த்தால் அப்பொழுதுதான் எள் ஆட்டிய புதுப் புண்ணாக்கும், வெல்லமும் தருவார். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். நானும் அவர் கொடுத்துச் சாப்பிட்டிருக்கிறேன். சுவையாக இருக்கும்.



டவுன் ஹால் ரோடின் நடுமத்தியில் அதை ஒட்டியவாறு ஒரு பக்கத்தில் அந்தக்காலத்தில் சின்ன தெரு ஒன்று உண்டு. அந்தத் தெருவின் முதலில் இருந்த மாடி வீட்டுக்கு குடித்தனம் மாறி விட்டோம். நானும் ஆதிமூலம் பிள்ளைத் தெரு ஆரம்பப்பள்ளியிலிருந்து ஆறாம் வகுப்பு வந்து விட்டதால், மேற்கு ஆவணி மூலவீதியில் இருந்த அன்னக்குழி மண்டபம் ஸ்கூல் என்னும் பள்ளிக்கு மாறிவிட்டேன். பள்ளியின் உள் சென்றவுடனேயே, நட்டநடுப் பகுதியில், நிறைய ஆற்று மணல் கொட்டி மேடு தட்டப்பட்டிருக்கும். அந்த மணலில் நாங்கள் விளையாடிய 'சடுகுடு' விளையாட்டுகள், மறக்கமுடியாதவை. "நான் தான் உன் அப்பன்.. நல்லமுத்து பேரன்.. வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வாரேன்.. வாரேன்.." என்று 'வாரேன்..வாரேன்' னை இழுத்துப் பாடியபடி, மூச்சு விட்டு விடாமல் நடுக்கோடு தாண்டி. எதிரணி எல்லைக்குள் அட்டகாசமாய் நுழைந்து, அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, சில சமயங்களில் காலை மேல் நோக்கி வீசிக்காட்டி அவர்களை கால் பற்ற டெம்ட் பண்ணியும், முன்னோக்கி அவர்கள் ஓடி வருகையில், அவர்களிடம் பிடிபட்டும், வாரேன்..வாரேன்..னை விட்டுவிடாமல், மூச்சுப் பிடித்து, மீண்டு, எட்டி கைநீட்டி நடுகோட்டைத் தொடுவது சாகசம் தான்!.. ஸ்கூல் விட்டும், சில நாட்களில் ப்யூன் வந்து கதவைச் சாத்த வேண்டும் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரை, விளையாடிக் கொண்டிருப்போம். புத்தகப் பையெல்லாம் மணல்... உடலெல்லாம் மணல் என்று அத்தனையும் தட்டி, சேர்ந்து வீடு போகும் வரை என்னென்னவோ அவரவர் பிரதாபங்கள் தான்...!

டவுன் ஹால் ரோடு வீட்டு வாசலில் பெட்டிக்கடை மாதிரி ஒரு கடையை பாலகிருஷணன் என்னும் கேரளத்தவர் வைத்திருந்தார். அவரது கடை அந்தக் காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான பதிவு - விற்பனை கடையாக இருந்தது. குறுக்கெழுத்துப் போட்டிகளில் R.M.D.C. என்னும் நிறுவனத்தின் போட்டி மிகப்பிரலமானது. போட்டிக்கான இலவச பாரங்களை வாங்கி, பூர்த்தி செய்து, ஒரு பதிவுக்கு இவ்வளவு என்று பணத்தைக் கட்டி, ரசீது வாங்கிக்கொண்டால், அடுத்த நாள, முதல் நாள் போட்டியின் ரிஸல்ட் வந்து விடும். எல்லாம் சரி, ஒரு தவறு, இரண்டு தவறு என்று முறையே பத்தாயிரம், ஐயாயிரம், ஆயிரம் என்று பரிசுகள் அறிவிக்கப்படும். பலர் சரியான விடையை எழுதும் பட்சத்தில் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும். நூறு ரூபாய்க்கு குறைவாக பரிசுத் தொகை இருந்தால், அந்தக் கடையிலேயே ரசீதைக் காட்டி பரிசு பெற்றுக்கொள்ளலாம். பாலகிருஷ்ணன் கடை மாதிரி நகரில் பல கடைகள்!

குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகளுக்கான ஒரு மாதிரி:

1. பெண்களுக்கு இந்த மலரைக் கண்டாலே கொள்ளை ஆசை: (ரோஜா/மல்லிகை)

2. சோற்றில் பிசைந்து கொண்டு சாப்பிடுவது: (ரசம்/குழம்பு)

3. இந்த உறவென்றால் தனி மதிப்பு தான்: (தம்பி/தங்கை)

இப்படி போட்டிக்கேள்விகள் எளிதாக இருக்கும். மூளைக்கு அதிக வேலை இருக்காது. இரண்டு ஆப்ஷன்களும் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். அவர்கள் வைத்திருக்கும் சரியான விடைக்குப் பொருந்தியிருந்தால் பரிசு, அவ்வளவு தான்! மாலை 7 மணி ஆகிவிட்டால் போதும். கடை ட்யூப் லைட்டெல்லாம் போட்டு, 'ஜே,ஜே' என்று ஆகிவிடும். சில போட்டிகள் அன்று மாலை முடிந்து அன்று இரவு பத்து மணிவாக்கில் ரிசல்ட் வந்துவிடும். ரிசல்ட் வரும் நேரம் கூட்டம் கொஞ்சம் பெருத்துவிடும். பெரியவர்கள், சின்னவர்களென்று வித்தியாசமில்லாமல் கூச்சலும், கும்மாளமுமாக இருக்கும். இந்த சப்தம் கேடடு, ஒரு சின்னத்தூக்கத்தை கத்திரித்துக்கொண்டு வெளியே வந்து ரிசலட்டை சரிபார்த்ததும் உண்டு.

இந்த டவுன்ஹால் ரோடு வீட்டில் இருக்கும் பொழுது தான் 'தங்கம்' தியேட்டர் திறக்கப்பட்டது. முழுத் தியேட்டருக்குமான கட்டுமானப்பணிகள் முடிந்துவிட்டாலும் சில சில்லரை வேலைகள் பாக்கியிருந்தன. அதற்குள் முதல் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அங்கங்கு கொட்டியிருக்கும் மணல் குவியல்கள், தொங்கும் வாளிக்கட்டிய கயிறுகள், போட்டது போட்டமேனிக்கு இருக்கும் சில கட்டிடவேலைப் பொருள்கள் என்று இவற்றிக்கு ஊடே நுழைந்தும், தாண்டியும் சுடச்சுட ரிலீஸாகியிருந்த "பாராசக்தி" படத்தை இரண்டாம் நாள் பார்த்த நினைவு மறக்கினும், கலைஞரின் வசனத்தை வாழ்நாள் பூராவும் மறக்கமுடியாது. "கல்யாணி மங்களகரமான பெயர்; ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை.." என்று ஆரம்பித்தால், "வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், இந்த சட்டத்தை நீட்டுவோர்.." என்று முடிக்கும்வரை என்று, கோர்ட் சீன் வசனங்களை மூன்று நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, சட்டம் பதித்த ஒரு நாற்காலியைத் திருப்பிப்போட்டு - அதன் முதுகு சாயும் பகுதியை இரு கைவிரல்களால் இறுகப்பற்றி நீதிமன்ற சாட்சிக் கூண்டாகப் பாவித்து, நண்பர்கள் ஒன்று சேர்ந்து வீட்டு மொட்டை மாடியில் 'பராசக்தி'யை அரங்கேற்றுவோம். இதில், 40 பக்க நோட்டுப்புத்தகத்தைப் பிரித்துப் படித்தபடி பின்னால் 'ப்ராம்ட்டர்' வேறே! கதையின் நாயகன், எங்கள் அண்ணன் மாதிரி -- சிவாஜி கணேசன் மீது எங்களுக்கு ஒரு கிரேஸ்!.. உண்மையில் கதையின் நாயகனாக வி.சி.கணேசன் என்று பட டைட்டிலில் போட்டு வெள்ளித்திரையில் தெரிந்தாலும், திரைக்குப்பின்னான படத்தின் நாயகன், கலைஞர் தான்!.. "யாரு வசனகர்த்தா? இந்தப் போடு போடறாரே?" என்று எல்லோரையும் புருவம் உயர்த்திப் பார்க்க வைத்து, வசனத்தை சொல்லிப்பார்க்கச் செய்த பெருமை சந்தேகமில்லாமல் கலைஞருக்குத் தான் சேரும்! அதுவரை திரைப்படமென்றால், பத்து நிமிஷத்திற்கு ஒரு பாட்டு என்றிருந்த நிலையை முற்றிலும் மாற்றி, அடுக்குமொழி வசனத்தை அள்ளித் தெளித்து, படம் பார்ப்போரை நிமிர்த்தி உட்காரவைத்து, வசனத்திற்காகவும், அதை அருமையாக உச்சரித்ததற்காகவும் ஓடிய படம், பராசக்தி!

மாப்பிள்ளை விநாயகர் சோடா என்று கோலிசோடா ஒன்று விற்பனையாகும். ரப்பர் வளையம் பற்றியிருக்கும் கோலிக்குண்டை, மரஅழுத்தி கொண்டு தட்டி, உள்நிரம்பியிருக்கும் சோடாவையோ, ஜிஞ்சரையோ குடிக்க வேண்டும்.ஜின்ஞர் நீர் நிறைந்த சோடாவிற்கு ஜின்ஞர் பீர் என்று பெயர். டவுன்ஹால் ரோடில் இருந்த 'காலேஜ் ஹவுஸ் ஹோட்டலின், பாக்கெட்டில் அடைத்த வறுத்த முந்திரிப் பருப்புகளும்,காப்பியும் பிரசித்திபெற்றவை.ஊர் முழுக்க டிவிஎஸ் கம்பெனியாரின் டவுன்பஸ் தான். எல்லாம் வெள்ளை நிறத்தில், பஸ்ஸின் வெளிநடுப்பகுதியில் TVS எழுத்து வெளிர்பச்சையில் ஒரு வட்டத்திற்குள் வருகிற மாதிரி எழுதியிருப்பார்கள். அப்பொழுது 20 எண்வரை பஸ்ரூட் இருந்தது. எண் ஒன்று - சொக்கிகுளம், மற்றும் எண் இருபது - திருநகர் செல்லும் பஸ்கள் என்று நினைவு. சில வெளியூர் பஸ்களில்,பின்பக்கம் வீட்டில் காப்பிக்கொட்டை அரைக்கும் மிஷின் மாதிரியான தோற்றத்தில், ஒரு மிஷின் உண்டு. வண்டியின் நடத்துனர் அந்த மிஷினின் பிடிபற்றிச்சுற்றி, பின்பக்க பாய்லரில் கொட்டியிருக்கும் கரி எரித்து வண்டியைக் கிளப்ப வழிபண்ணுவதும் உண்டு!

இப்படிப்பட்ட பசுமையாக மனதில் தூங்கும் நினைவுகளை எழுதிக்கொண்டே போகலாம். எழுத எழுத எழுதாமல் விட்டு ஏதோ பாக்கியிருக்கிற மாதிரிதான் தோன்றுகிறது. இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால்,எழுதுகையில் காலக்கணக்கு தவறுகளினால், முன்பின்னாக சில நினைவுகள் மாறிப்போயும் விட்டன. அப்பொழுதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதிப்படிப்பு முடிக்க வேண்டுமானால், பதினொன்று ஆண்டுப் படிப்பு. இப்பொழுது ஸ்டாண்டர்ட் என்பதை அப்பொழுது 'ப்பார்ம்' என்று அழைப்பார்கள்.

நானும் செகண்ட் ப்பார்ம் என்று சொல்லிய ஏழாம் வகுப்புக்கு மறக்க முடியாத மதுரை நீங்கி, திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூலில் போய்ச் சேர்ந்தேன். பள்ளியின் நட்டநடுப் பகுதில் ஒரு பெரிய மணிக்கூண்டுடன்,விசாலமான நிலப்பரப்பில் கட்டப்பட்டு, மிக அருமையாக இருக்குமாக்கும், செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூல்!.